குழந்தையைப் பார்க்காமலே வீரமரணம் அடைந்த வீரர்; பேரனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்: தந்தை பேச்சு

இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
குழந்தையைப் பார்க்காமலே வீரமரணம் அடைந்த வீரர்; பேரனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்: தந்தை பேச்சு


இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதில், ஜார்க்கண்ட் மாநிலம் திஹாரி கிராமத்தைச் சேர்ந்த குந்தன் குமார் ஓஜாவும் ஒருவர். இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 18 நாள்களுக்கு முன்புதான் ஓஜாவுக்கு மகள் பிறந்துள்ளார். தந்தையாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், தனது மகளின் முகத்தைக் கூட பார்க்காமலேயே ஓஜா, வீர மரணம் அடைந்துள்ளார்.

மகள் பிறந்ததுமே, தனது மகளைக் காண விரைவில் வீட்டுக்கு வருவதாக மனைவியிடம் கூறியிருந்த ஓஜா, பிறகு, எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், நிலைமை சீரடைந்ததும் மகளைக் காண ஜார்க்கண்ட் திரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வரும் குந்தன் குமார் ஓஜா, தனது மகளைக் காண வேண்டும் என்று மிகுந்த ஆசையோடு இருந்ததாகவும், கடைசி வரை அது நிறைவேறாமல் போனதாகவும் கூறி குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்த நிலையில், வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தனது மகனின் இறுதிச் சடங்கில், இளைய மகனுக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்த குந்தன் குமாரின் தந்தை பேசுகையில், தாய் நாட்டுக்காக எனது மகன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான். எனக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களையும் நான் ராணுவத்துக்கு அனுப்புவேன் என்று கூறியுள்ளார்.

மகனை இழந்த நேரத்திலும், நாட்டுக்காக பேரக் குழந்தைகளையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என்று, வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை பேசியிருப்பதற்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com