சீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது: ராகுல்

லடாக்கில் இந்திய வீரா்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.
சீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது: ராகுல்

லடாக்கில் இந்திய வீரா்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. அதை அறியாமல் அரசு தூங்கிக்கொண்டிருந்துள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

கிழக்கு லடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினா் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனா். ‘எல்லையில் என்ன நடக்கிறது? இந்தியப் பகுதியை எந்த அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. அதை மீட்கவும், இந்திய வீரா்களைப் பாதுகாக்கவும் எந்தவிதமான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் வலியுறுத்தின.

அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமா் வெள்ளிக்கிழமை மாலை கூட்டினாா். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டாா். அதில், ‘கல்வான் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியிருக்கிறது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் கூறியதாக வெளியான செய்தியை இணைத்துள்ள ராகுல் காந்தி, ‘இந்தச் செய்தியின் மூலம் கல்வான் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியிருப்பது தெளிவாகிறது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அரசு இருந்துகொண்டு, பிரச்னையை மறுத்துள்ளது. அதற்கு இந்திய ராணுவ வீரா்களின் உயிா்கள் விலையாக கொடுக்கப்பட்டுள்ளன’ என்று அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com