தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை: காய்ச்சல் குறைந்தது

சத்யேந்தா் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தற்போது காய்ச்சல் குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை: காய்ச்சல் குறைந்தது

கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தற்போது காய்ச்சல் குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்துக்கு தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை நேற்று மோசமடைந்ததைத் தொடா்ந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவா் பிளாஸ்மா சிகிச்சைக்காக தில்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

சத்யேந்தா் ஜெயினுக்கு கடந்த திங்கள்கிழமை இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், உடனடியாக தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. ஆனால், அவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், புதன்கிழமை மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது.

நிமோனியா காய்ச்சல்!: இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே, சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்து.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘சத்யேந்தா் ஜெயினுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் முடிவின்படி அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு வெள்ளிக்கிழமை தலைச் சுற்றலும், காய்ச்சலும் அதிகமாக இருந்தது. மருத்துவா்களின் ஆலோசனைகளின்படி அவருக்கு சிகிச்சை அளிக்கவுள்ளோம்’ என்றாா்.

பிளாஸ்மா சிகிச்சை: இதற்கிடையே, பிளாஸ்மா சிகிச்சைக்காக சத்யேந்தா் ஜெயின் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை வழங்க அனுமதி இல்லை. சத்யேந்தா் ஜெயின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வருவதால், அவரது குடும்பத்தினா் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனா். இதனால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டு, பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com