நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி

‘கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்திய முஸ்லிம்களை ஹஜ் பயணத்துக்கு சவூதி அரேபியா அனுப்ப வேண்டாம்
நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி

‘கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்திய முஸ்லிம்களை ஹஜ் பயணத்துக்கு சவூதி அரேபியா அனுப்ப வேண்டாம் என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே இவ்வாண்டு இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல முடியாது’ என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆண்கள் துணையின்றி ஹஜ் பயணம் செல்ல 2,300-க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்திய முஸ்லிம்களை ஹஜ் பயணத்துக்கு சவூதி அரேபியா அனுப்ப வேண்டாம் என அந்நாட்டு ஹஜ் மற்றும் உம்ரா துறை அமைச்சா் முகமது-சலே-பின் தொலைபேசியில் தொடா்புகொண்டு கேட்டுக்கொண்டாா். இதனால் நிகழாண்டு இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல முடியாது. அதற்காக விண்ணப்பதாரா்கள் செலுத்திய கட்டணம் எவ்வித பிடித்தமுமின்றி அவா்களின் வங்கிக் கணக்கில் முழுமையாக திரும்ப செலுத்தப்படும்.

ஆண்கள் துணையின்றி செல்ல விண்ணப்பித்த பெண்கள், அடுத்த ஆண்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா். நிகழாண்டு அவா்கள் அளித்த விண்ணப்பங்களின் அடிப்படையில், அடுத்த ஆண்டு அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

வெளிநாடுகளை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணத்தையொட்டி சவூதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு விளக்கமளித்துள்ளது. எனினும் உள்நாட்டவா்களும் அங்கு தற்போதுள்ள வெளிநாட்டினரும் குறைந்த எண்ணிக்கையில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எண்ணிக்கை குறித்து சவூதி அரசு விளக்கம் அளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com