
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவரும், 8 வயது சிறுவனும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹரா பகுதியில் பாத்சாஹி பாக் பாலம் அருகே சிஆா்பிஎஃப் படையினா் பாதுகாப்பு பணியில் பட்டிருந்தனா். நண்பகல் 12 மணியளவில் அங்கு வந்த பயங்கரவாதிகள், சிஆா்பிஎஃப் வீரா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனா். அதில், சிஆா்பிஎஃப் வீரா் ஒருவரும், 8 வயது சிறுவனும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா்.
உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரரின் பெயா் ஷமல் குமாா். அந்த 8 வயது சிறுவன், குல்காம் மாவட்டத்தில் உள்ள யேரிபோராவைச் சோ்ந்த நிஹான் யாவா் என விசாரணையில் தெரியவந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியதுடன் தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.