சீனா குறித்து பேச பிரதமர் பயப்படுகிறார்: நாட்டு மக்களிடையே உரை குறித்து காங்கிரஸ்

மோடி ஆற்றிய உரையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ், ஏன் சீன ஆக்ரமிப்பு குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.
சீனா குறித்து பேச பிரதமர் பயப்படுகிறார்: நாட்டு மக்களிடையே உரை குறித்து காங்கிரஸ்


நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ், ஏன் சீன ஆக்ரமிப்பு குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் தொடங்கிய பிறகு ஆறாவது முறையாக இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று பரவல் காரணமாக வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் காங்கிரஸ், சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்க பிரதமர் மோடி மறந்துவிட்டார். நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் போது சீனா குறித்து பேச பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், ஒரு கிலோ கடலைப் பருப்பும் இலவசமாக பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் தனது கருத்தைப் பதிவு செய்கையில், பிரதமர் மோடி இந்த உரையை தவிர்த்திருக்கலாம் என்று யோசனை கூறியுள்ளது.

மேலும், இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். லடாக்கின் நான்கு பகுதிகளில் சீனப் படை உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. தயவு கூர்ந்து நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள், சீனப் படையை எவ்வாறு இந்திய நிலப்பரப்பில் இருந்து அகற்றப்போகிறீர்கள்? எப்போது? என்று என ஏற்கனவே காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com