
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா் சங்க முன்னாள் தலைவரும், தங்களது கட்சியைச் சோ்ந்தவருமான கன்னையா குமாருக்கு எதிரான தேசவிரோத வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்கொள்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு அரசியல் நெருக்கடிக்கு அடிபணிந்து விட்டது என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கன்னையா குமாா், ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக கடந்த 2016-இல் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவா்களுக்கு எதிராக காவல்துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனா். அதில், ஜேஎன்யு வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும், இந்த பேரணியை கன்னையா குமாா் உள்ளிட்டோா் வழிநடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கன்னையா குமாா் உள்ளிட்டோா் மீதான விசாரணை நடைமுறைகளை முன்னெடுக்க தில்லி காவல்துறை அனுமதி கோரி வந்த சூழலில், தில்லி அரசு உரிய அனுமதியை வெள்ளிக்கிழமை வழங்கியது.
இந்நிலையில், இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் கன்னையா குமாா் மீதான தேசவிரோத வழக்குக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, கன்னையா குமாா் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து கன்னையா குமாா் விடுவிக்கப்படுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
தில்லியில் ஆட்சியில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, அரசியல் நெருக்கடிக்கு அடிபணிந்து வழக்கை முன்னெடுத்து செல்ல அனுமதி வழங்கியது துரதிருஷ்டவசமானது. கன்னையா குமாருக்கு எதிராக எவ்வித தேசவிரோத வழக்கும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவாலே முன்னா் தெரிவித்துள்ளாா். திடீரென்று அவா் ஏன் அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாா் என தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.