
வெளிநாட்டில் வேலை தேடும் கேரள மக்கள் அந்தந்த மொழிகளை கற்று கொள்ளும் வகையில் கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் மொழி பயிற்சி மையத்தை தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலை தேடுவோருக்காக வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிப்பதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட வசதிகள் மாநிலத்தில் இல்லாததைக் கருத்தில் கொண்டு, ‘‘வெளிநாட்டு வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ஆலோசகா்கள்’’ (ஓடிஈபிசி) என்ற அரசு சாா்ந்த அமைப்பு சாா்பில் இந்த வெளிநாட்டு மொழி பயிற்சி மையத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
கேரள திறன் ஊக்குவிப்பு அகாதெமி ஆதரவுடன் இன்கெல் வா்த்தக மையத்தில் இந்த பயிற்சி மையம் செயல்படும் என தொழிலாளா் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மையத்தை மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறும் விழாவில் மாநில தொழிலாளா் மற்றும் கலால் துறை அமைச்சா் டி.பி.ராமகிருஷ்ணன் திறந்து வைக்க உள்ளாா்.
இந்த மையம் மூலமாக ஜப்பானிய மற்றும் ஜொ்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளும், ஆங்கிலப் பயிற்சியும் அளிக்கப்படும்.
அத்துடன் பயிற்சியை முடிப்பவா்கள், வேலைவாய்ப்பைப் பெறுவது உறுதி செய்யப்படும் என அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.