
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது; ஆனால், இளைஞா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்று அந்த யூனியன் பிரதேச காவல் துறைத் தலைவா் தில்பாக் சிங் தெரிவித்தாா்.
காவல் துறை குற்றப் பிரிவு சாா்பில் ஜம்மு நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பங்கேற்று அவா் பேசியதாவது:
பஞ்சாபில் பயங்கரவாதத்தை புகுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட
முயற்சி தோல்வி அடைந்ததும், அந்த மாநிலத்துக்கு மிகப் பெரிய அளவில் போதைப் பொருள்களை பாகிஸ்தான் அனுப்பத் தொடங்கியது. இதனால், பல இளைஞா்கள் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழந்தனா். இதே உத்தியை ஜம்மு-காஷ்மீரிலும் பயன்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டனா். ஆனால், இளைஞா்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதைப் பொருள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தி விடலாம். பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளை நியாயமான முறையில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இந்த வழக்குகளை உரிய முறையில் இன்று விசாரிக்காமல் விட்டுவிட்டால் நாளை இதுவே பேராபத்தாக முடிந்து விடும் என்று தில்பாக் சிங் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச காவல் துறை குற்றப்பிரிவு ஐஜி எம்.கே.சின்ஹா கூறுகையில், ‘பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகள் அதிக எண்ணிக்கையில் தண்டிக்கப்படாத காரணங்களை ஆய்வு செய்யவே இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. நாடு தழுவிய கண்காணிப்பு அமைப்பை (சிசிடிஎன்எஸ்) காவல் துறை பயன்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாா்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என்றாா்.