
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்காமல் நரேந்திர மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில்,
"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றன. சிஏஏ குடியுரிமையை வழங்க மட்டுமே செய்யும், யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருக்கும் நான் உறுதியளிக்கிறேன். உங்களது குடியுரிமையை அது பாதிக்காது.
அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமையை வழங்காமல் நாங்கள் ஓயமாட்டோம்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஷகீன்பாக், சென்னை வண்ணாரப்பேட்டை என நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் அமைதிப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.