ரே பரேலி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மணமகளை கழுத்தை நெரித்து மணமகன் கொன்ற கொடூர சம்பவம் நிகழந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டம் குர்பக்ஸ்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் சரிகா யாதவ் (20). செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் இவருக்கு, மன்டோஷ் யாதவ் (24) என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. பதாய் பூர்வா கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி பயின்று வந்த சரிகா, திருமணத்திற்கு சில பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 26 ஆம் தேதி, மண்டோஷுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அவரது உடல் அந்த கிராமத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சரிகாவுடன் கடைசியாக வெளியே சென்றவர் என்ற அடிப்படையில், மன்டோஷிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் சரிகாவை ராதாபுர் பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவரை மயக்க மாத்திரை ஒன்றை விழுங்கச் செய்து, பின்னர் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததை, மன்டோஷ் ஒப்புக் கொண்டார். பின்னர் தனது சகோதரரின் உதவியுடன் சரிகாவின் உடலை கிராமத்திற்கு வெளியே சென்று வீசி விட்டுவந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
கல்லூரிக்கு சென்றுவர வசதியாக சரிகா ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கேட்டதால் தான் எரிச்சல் அடைந்ததாகவும், அத்துடன் சரிகாவிக்கு இந்னொருவருடன் தொடர்பு இருப்பதாக தான் சந்தேகித்ததாகவும் மன்டோஷ் இந்த கொலைக்கு காரணங்களாக கூறியுள்ளார்.
இதனால் மன்டோஷையும் அவரது சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறு வருகிறது.