
கரோனா வைரஸ் அச்சத்தால் இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பரவி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே சீனர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டதும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட நாடுகளில் முக்கிய அதிகாரிகள் இந்தியா வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் இந்தியா வர விரும்பினால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும், அதேநேரத்தில் போதுமான மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அவர்கள் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...