
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் துணைச் செயலர் சௌமிய சௌரஸியா துர்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 20 மணிநேரமாக சோதனை நடத்தினர்.
திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடைபெற்ற திடீர் சோதனையில் சௌமிய சௌரஸியா தாயாரிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பிலாயில் அமைந்துள்ள சௌமிய சௌரஸியாவுக்குச் சொந்தமான வீட்டிலும் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், ராய்பூர் மேயருமான அஜஸ் தேபர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆகியோருக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கு சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், கடந்த சனிக்கிழமை வருமானவரித்துறை சோதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.
மாநில அரசை நிலைகுலைய வைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த வருமானவரித்துறை சோதனையை நடத்தி வருவதாக முதல்வர் பூபேஷ் பகேல் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...