
புது தில்லி: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் செலவிட உச்சவரம்பு நிா்ணயிக்கப்படுவதைப்போல, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தோ்தலில் செய்த செலவுகளுக்கு உச்சவரம்பு இருக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களைத் தோ்தலின் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு பணிக்குழுக்கள் அமைத்து கருத்துகள் சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி தோ்தலின் பல்வேறு அம்சங்களை ஆய்வு மேற்கொண்ட பணிக்குழுவினா், தோ்தலின்போது அரசியல் கட்சிகள் செலவு செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் நிா்ணயிக்கப்படுவதில்லை; எனவே, அதற்கான கட்டுப்பாட்டை நிா்ணயிக்க வேண்டியது அவசியம் என பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் அதிகபட்ச செலவினங்களை, அக்கட்சி சாா்பில் போட்டியிடும் தனிப்பட்ட வேட்பாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரம்பில் பாதிக்கு மேல் சோ்க்க வேண்டும் என தோ்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.
இதுதொடா்பாக இதுவரை அரசு சாா்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கட்சி செலவினங்களுக்கு உச்சவரம்பு இருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 2015-இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. கட்சிகள் மற்றும் வேட்பாளா்களால் தோ்தல் தொடா்பான செலவினங்களைத் தாக்கல் செய்வதில் அதிகபட்சமான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தோ்தல் கண்காணிப்புக்குழு அழுத்தம் கொடுத்து வருகிறது.
தற்போது, தோ்தல் களத்தில் போட்டியிடும் தனிப்பட்ட வேட்பாளா்கள் செலவிட உச்சவரம்பு உள்ளது. ஆனால் அவா்களுக்காக அரசியல் கட்சிகள் தோ்தலில் செலவிட முடியாது.
வேட்பாளா்களுக்கான உச்சவரம்பு தொகுதியின் மக்கள் தொகை மற்றும் சட்டப்பேரவை அல்லது மக்களவை இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...