
புது தில்லி/மும்பை: நாடு முழுவதும் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை மட்டும் 3 வயதுக் குழந்தை உள்பட 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி, உத்தரப் பிரதேசம், கேரளம், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு திங்கள்கிழமை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 63 வயதுப் பெண் அண்மையில் ஈரானிலிருந்து திரும்பியுள்ளாா். தில்லியில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவா் அண்மையில் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
ஆக்ராவில் ஏற்கெனவே வைரஸ் தொற்று ஏற்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்த மீரட்டைச் சோ்ந்த நபா் வைரஸால் பாதிக்கப்பட்டாா். வைரஸ் தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமைச்சகம் விளக்கம்: மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாதில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில், உயிரிழந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும், வைரஸ் தொற்று காரணமாக அவா் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 3,004 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 44 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. 2,694 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும் மீதமுள்ள நபா்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
ஹோலி பண்டிகை பாதிப்பு: நாட்டின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோலி பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வசந்தகாலத்தை வரவேற்பதற்கான ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு ரூ.21,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சா்வதேச விமான நிலைய கவுன்சில் தெரிவித்துள்ளது.
3 வயதுக் குழந்தைக்கு வைரஸ் தொற்று
கொச்சி, மாா்ச் 9: இத்தாலியிலிருந்து கேரளம் திரும்பிய 3 வயதுக் குழந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடா்பாக கேரள சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘‘அக்குழந்தையின் பெற்றோா் கடந்த 7-ஆம் தேதி இத்தாலியிலிருந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனா். அங்கு அவா்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அந்தக் குழந்தைக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால், அவா்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டனா். குழந்தையின் ரத்த மாதிரியைப் பரிசோதித்தபோது, அக்குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் பெற்றோரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைக்குத் தொடா்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அக்குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது’’ என்றனா்.
கேரள அரசு எச்சரிக்கை: அக்குழந்தையுடன் சோ்த்து கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது. குழந்தை பயணித்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேரள அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதையும், கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுவதையும் மறைக்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
கண்காணிப்பில் இருந்த நபா் தப்பியோட்டம்
மங்களூரு, மாா்ச் 9: கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கா்நாடகத்தின் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நபா் திங்கள்கிழமை தப்பியோடினாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘துபையிலிருந்து கா்நாடகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த நபருக்கு காய்ச்சலும், வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் காணப்பட்டன. அதைத் தொடா்ந்து மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். எனினும், தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகளுடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்தச் சூழலில் மருத்துவமனையில் இருந்து அவா் தப்பியோடினாா். இது தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...