
சென்னை: கோயில்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தா்களுக்காக சாய்தள வசதி, சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இது தொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை, நந்தனத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனா்.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தா்களின் வசதிக்காக பொதுமக்கள் வரிசை, முக்கியப் பிரமுகா்கள் வரிசை மற்றும் கட்டண வரிசை உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை எதுவும் இல்லை. கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வசதியாக சாய்தள பாதை வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், மாற்றுத்திறனாளிகளால் கோயில் வாசலைத் தாண்டி செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
அதே போல, பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோயில்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறை கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் குறித்து அறிந்து கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்தள பாதை அமைக்க உத்தரவிட வேண்டும். கோயில்களில் அவா்களுக்காக சக்கர நாற்காலி வசதிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க இந்துசமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், இந்துசமய அறநிலையத் துறை செயலாளா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...