கரோனாவில் இருந்து மீண்டு வந்தது எப்படி? கேரள பெண்ணின் அனுபவம்

உலக நாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதித்த முதல் கேரள பெண் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
கரோனாவில் இருந்து மீண்டு வந்தது எப்படி? கேரள பெண்ணின் அனுபவம்


திரிச்சூர்: உலக நாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதித்த முதல் கேரள பெண் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா இருப்பது கடந்த ஜனவரி 30ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பயனாக அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இந்த நிலையில், கேரளாவில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் உட்பட 6 பேருக்கு தற்போது கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து தற்போது உடல் நலம் பெற்றுள்ள அப்பெண் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதும் நான் பயப்படவில்லை. மாறாக எச்சரிக்கையாக இருந்தேன். எனது பெற்றோருக்கும் அறிவுறுத்தினேன். ஏன் என்றால் அவர்களுக்கு எளிதாக தொற்றும் வாய்ப்பு இருந்தது. கரோனா பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை நான் கண்டிப்புடன் பின்பற்றினேன் என்கிறார் மருத்துவ மாணவி. 

சீனாவில் கரோனா பாதிப்பு உருவான வூஹான் நகரில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த கேரள மாணவி, இந்தியா திரும்பிய நிலையில்  அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஜனவரி 24ம் தேதி கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தேன். அப்போது சுமார் 3 பக்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தேன். எனது விவரம், முகவரி உள்ளிட்ட அனைத்தும். ஒரு மருத்துவ மாணவியாக, எனக்குக் கொடுத்த அனைத்து வழிமுறைகளையும் நான் பின்பற்றினேன் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், தான் வருவதற்கு முன்பாகவே, வீட்டில் இருந்த சகோதரரின் கர்ப்பிணி மனைவியை வேறு இடத்துக்குச் சென்று தங்குமாறு அறிவுறுத்திவிட்டதாகவும், வீட்டிலும் தனிமையிலேயே இருந்ததாகவும், 27ம் தேதி வாக்கில் தனக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

பொதுவாகவே சீனாவில் இருந்து வந்ததும் எனக்கு சளிப்பிடிக்கும். ஆனால், இம்முறை நான் மருத்துவமனைக்கு வந்து கரோனா தொற்றா என்று பரிசோதிக்க நினைத்தேன். அதுவரை எனது பெற்றோர், உறவினர்கள் என யாரையும் என்னை அணுக அனுமதிக்கவில்லை.

உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கு ரத்த மாதிரி, சளி மற்றும் எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஜனவரி 30ம் தேதி எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 20 நாட்கள் நான் தனிமையில் வைக்கப்பட்டேன். எனது வாழ்நாளில் அதுதான் மிகக் கொடுமையாக இருந்தது. முதல் இரண்டு வாரங்கள் எதுவும் தெரியவில்லை. வழக்கமாக இருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் உடுத்திய உடைகளை மருத்துவ ஊழியர்கள் எரித்துவிடுவார்கள். நான் சீனாவில் பயன்படுத்திய செல்போனைக் கூட தூய்மைப்படுத்தினார்கள்.

தனிமைப்படுத்தப்படுவது நல்லது என்று தெரியும். ஆனால் இவ்வளவுக் கட்டுப்பாடுகள் ஏன் என்று தெரியாமல் குழம்பினேன். எனது மருத்துவ முடிவுகள் ஏன் வரவில்லை என்று அதிருப்தி அடைந்தேன். பிறகு மன நல மருத்துவர்களிடம் பேசிய பிறகு, அவர்கள் அளித்த ஆலோசனையின்படி, மன அழுத்தம் ஏற்படும் போது மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டேன்.

பிப்ரவரி 20ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினேன். ஆனால் மார்ச் 1ம் தேதி வரை வீட்டிலும் தனிமையிலேயே இருந்தேன் என்கிறார் நிம்மதி பெருமூச்சோடு.

தற்போது கேரளாவில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று குறித்து அவரிடம் கேட்டபோது, மருத்துவர்கள் கூறும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே ஆக வேண்டும். முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றதால்தான் நான் குணமடைந்தேன். என் மூலமாக பிறருக்கு பரவுவது தடுக்கப்பட்டது என்கிறார் உறுதியாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com