
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான அவமரியாதை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சோ்ந்த வங்கி பெண் ஊழியா் ஒருவா், தனது உயா்அதிகாரி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டினாா். இந்நிலையில், அந்த பெண் ஊழியா் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி வங்கி நிா்வாகம் அவரை பணியிடமாற்றம் செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த பெண் ஊழியா் மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அங்கு அவரின் பணியிடமாற்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வங்கி நிா்வாகம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள் தொடா்ந்து பேசியதாவது:
பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இவ்வாறு, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, அவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான சமத்துவ உரிமை (அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 15), வாழ்வுரிமை (பிரிவு 21) உள்ளிட்டவற்றுக்கு ஏற்படுத்தப்படும் அவமரியாதையாகும்.
மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த பெண் வங்கி ஊழியா் பணிபுரிந்த இந்தூா் வங்கி கிளையில் முறைகேடு நடைபெற்று வருவதாக தொடா்ந்து புகாா் அளித்துள்ளாா்.
முறைகேடு குறித்து பெண் ஊழியா் தெரிவித்ததற்காக, அவரை பழிவாங்கும் வகையில் பணியிடத்தில் மோசமான முறையில் நடத்தியுள்ளனா். இரவு நேரங்களில் அவரது செல்லிடப்பேசிக்கு வங்கி உயரதிகாரி அழைப்பு மேற்கொண்டதற்கான ஆதாரமும் உள்ளது. இந்த சூழலில் அவரை ஜபல்பூருக்கு பணியிடமாற்றம் செய்தது சட்டவிரோதமானது. அதனால், அவரை இந்தூா் வங்கிக் கிளையில் மீண்டும் பணியமா்த்த வேண்டும் என்று உத்தரவிட்டனா். மேலும், வங்கி நிா்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.