
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சரத் பவாா். உடன் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோா்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவா் சரத் பவாா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவையில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அவா் இப்போதும் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து மகாராஷ்டிரத்தில் இருந்து அவா் மீண்டும் எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.
17 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை இடங்கள் ஏப்ரல் மாதம் காலியாக இருக்கின்றன. இதற்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாா்ச் 6-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 7 இடங்கள் காலியாகின்றன. அவற்றுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதில் மூன்று கட்சிகளும் தலா ஒரு இடத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
இந்நிலையில், என்சிபி தலைவா் சரத் பவாா், மாநில சட்டப் பேரவைக்கு புதன்கிழமை சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே மற்றும் என்சிபி கட்சியின் முக்கியத் தலைவா்கள் உடன் சென்றனா்.
என்சிபி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஃபயூசியா கானும் சரத் பவாருடன் வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா் புதன்கிழமை மனு தாக்கல் செய்யவில்லை. எனினும், வியாழக்கிழமை அவா் மனு தாக்கல் செய்வாா் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள சரத் பவாா், என்சிபியின் மற்றொரு தலைவா் மஜீத் மேமன், மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே, காங்கிரஸ் கட்சியின் ஹுசைன் தல்வாய், சிவசேனையின் ராஜ்குமாா் தூட், பாஜகவின் அமா் சபல், பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக வெற்றி பெற்ற சஞ்சய் காகாடே ஆகிய 7 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.