கரோனாவில் இருந்து தப்பிக்க தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட இந்தியா

தனிமை.. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கரோனா பாதித்தவர்களிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுக்கவும் ஒரே முக்கிய வழி தனிமைதான். அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது.
கரோனாவில் இருந்து தப்பிக்க தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட இந்தியா

தனிமை.. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கரோனா பாதித்தவர்களிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுக்கவும் ஒரே முக்கிய வழி தனிமைதான். அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.

கரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில், சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது கரோனா. 

அதற்காக இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எண்ணில் அடங்காதவை. உலகில் இருந்து இந்தியா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், தூதரக அதிகாரிகள், உயர் அதிகாரிகள் நீங்கலாக அனைத்து விசாக்களையும் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. 

இதனால், இந்தியாவுக்கு சுற்றுலா விசா அல்லது வேலை நிமித்தமாக விசா பெற்றிருந்தவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை வைத்திருப்பவர்களும் இந்தியா வர வேண்டும் என்றால் ஏப்ரல் 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்கப்பட்டு மேற்கண்ட சில முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதுபோலவே, இந்தியாவின் அனைத்து துறைமுகங்களிலும் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழையவும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. 

ஒரு வேளை, மிக அத்தியாவசியக் காரணத்துக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டவர், அருகில் இருக்கும் இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தாக்கியிருக்கும் கரோனா வைரஸில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தியா எடுத்த முடிவுதான் தனிமைப்படுத்திக் கொள்வது.

இந்த முடிவுகள் அனைத்தும் மார்ச் 13ம் தேதி இரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கேரளாவில் 8 பேருக்கும், ராஜஸ்தான், தில்லியில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 44 ஆக இருந்த பாதிப்பு வியாழக்கிழமை காலைக்குள் 73 ஆக உயர்ந்துள்ளது. இதில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த முதியவர் நேற்று பலியாகியுள்ளார்.

இதில், முக்கிய விஷயம் என்னவென்றால், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 1,400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பூடானில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அமெரிக்கருடன் தொடர்பில் இருந்த 404 இந்தியர்கள் அஸ்ஸாமில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமாக, இந்திய குடிமக்களுக்கு கரேனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாகவே, ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுதான் கரோனா பரவுவதற்கான முதன்மை காரணமாக இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தரைவழியில் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைவோருக்கும் கடும் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதா அல்லது பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் போட்டியை நடத்துவதாக என்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது. 

தமிழக மக்களுக்கு நல்ல செய்தி
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையல், அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது ரத்தப் பரிசோதனையில், கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பரவவில்லை என்றும், முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கரோனா பரவி வரும் கேரளாவுக்கு தமிழக மக்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com