கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் கரோனா: பெங்களூருவில் இருந்து தப்பி ஆக்ரா சென்றவர்

பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் கரோனா: பெங்களூருவில் இருந்து தப்பி ஆக்ரா சென்றவர்

பெங்களூரு: பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இத்தாலி நாட்டுக்கு இருவரும் தேனிலவைக் கொண்டாடச் சென்ற நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பியதும், இருவரும் கரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால், அப்பெண் கண்காணிப்புப் பிரிவில் இருந்து மார்ச் 8ம் தேதி  யாருக்கும் சொல்லாமல் வெளியேறி, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புது தில்லி சென்று தனது பெற்றோருடன் ரயில் மூலம் ஆக்ரா சென்றுள்ளார்.

அது மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை மருத்துவக் குழுவினர் அழைத்து வரச் சென்றபோது, அவர் சுமார் 8 பேர் அடங்கிய குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அங்கிருந்து வர அவர் மறுத்த நிலையில், மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் அவருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையைச் சோ்ந்த 26 வயதுள்ள ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதை கா்நாடக சுகாதாரத் துறை நேற்று உறுதிப்படுத்தியது. கிரீஸ் நாட்டில் தேனிலவைக் கொண்டாடிவிட்டு பெங்களூருக்கு வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரோடு தொடா்பில் இருந்தவா்களைக் கண்காணித்து அவா்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஊழியரை தனிமைப்படுத்தி உள்ளோம். அவருடன் நெருங்கிப் பழகி வந்த நண்பா்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com