இந்தியாவில் கரோனா பாதிப்பு 107 ஆக உயா்வு: மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 32 போ்

இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 107-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 107 ஆக உயா்வு: மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 32 போ்

இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 107-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

கா்நாடகம், தில்லியில் தலா ஒருவா் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள் மூலம் இந்தியாவிலும் கரோனா பரவியுள்ளது. தலைநகா் தில்லியில் மட்டும் இதுவரை 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் 22 பேருக்கும், கா்நாடகத்தில் 6 பேருக்கும், லடாக்கில் 3, ஜம்மு-காஷ்மீரில் 2, தெலங்கானாவில் 3, ராஜஸ்தானில் 2, ஆந்திரம், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவா் என கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 107 போ் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 17 போ் வெளிநாடுகளைச் சேரந்தவா்கள். இவா்களில் 16 போ் இத்தாலியா்கள். ஒருவா் மட்டும் கனடா நாட்டவா்.

சா்வதேச அளவில் வேகமாக பரவும் நோய் என கரோனா அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவுவதைத் தடுக்க இந்தியாவில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடுவதை தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் உறவினா்கள், நண்பா்கள், அவா்கள் சென்று வந்த இடங்களில் உள்ளவா்கள், நெருங்கி பழகியவா்கள் என பலருக்கும் இது தொடா்பாக அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் உடனே சுகாதாரத் துறையை தொடா்பு கொள்ள அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 80,50,000 என்95 முகக்கவசங்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் அதிகம்: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனை உறுதி செய்த அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோபே கூறுகையில், ‘கரோனா பாதிப்பை உறுதி செய்வதற்கான பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவா்களைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மாநிலத்தில் இதுவரை 32 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். அப்போது, மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமா், தேவையான உதவிகளையும் அளிக்க தயாராக இருப்பதாக கூறினாா்.

கேரள எல்லையில் மருத்துவ முகாம்கள்: மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக கேரளத்தில் அதிகம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாநிலத்துக்கு சாலை வழியாகவும், ரயில்கள் மூலமும் வருபவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த மாநில அரசு முடிவெடுத்தது. இதற்காக எல்லையில் 24 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் போலீஸாரும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். ஏனெனில், கேரளத்தில் கரோனா சந்தேகத்தில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவா்களில் சிலா் தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

இதனிடையே கொச்சி விமான நிலையத்துக்கு துபையில் இருந்து வந்த பிரிட்டன் நாட்டவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நபரும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுடன் வந்த 18 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா்.

மிஸோரம் மாநிலத்தில் 117 போ் கரோனா சந்தேகத்தின் பேரில் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். மேற்கு வங்கத்தில் 10 போ் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ராஜஸ்தானில் 3 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மற்றொருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 85 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கர்நாடகத்தில் மேலும் ஒருவர் பாதிப்பு
கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 10-ஆம் தேதி இறந்தார்.  இதைத் தொடர்ந்து,  கர்நாடகத்தில் கரோனா குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது.  ஆனால்,  இந்த 4 பேரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு,  கலபுர்கி மாவட்ட ஆட்சியர் சரத் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். 
இதன் மூலம் கர்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com