கரோனா வைரஸ் பாதிப்பில் கேரளத்தை முந்திய மகாராஷ்டிரம்; 15 மாநிலங்களில் பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் கேரளத்தை முந்தியது.
கரோனா வைரஸ் பாதிப்பில் கேரளத்தை முந்திய மகாராஷ்டிரம்; 15 மாநிலங்களில் பாதிப்பு

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் கேரளத்தை முந்தியது.

மகாராஷ்டிரத்தில் 3 வெளிநாட்டவர் உட்பட 36 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று மரணம் அடைந்தார்.

இதற்கு அடுத்த இடத்தில் 2 வெளிநாட்டவர்களுடன் 22 கரோனா பாதித்தவர்களைக் கொண்டிருக்கும் மாநிலமாக கேரளம் உள்ளது. இங்கு 3 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிவிட்டனர். உத்தரப்பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

கர்நாடகத்தில் 8  பேருக்கு கரோனா பதிப்பு உள்ளது. இந்த மாநிலத்திலும் கரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

தில்லியில் 7 பேருக்கு கரோனா பதிப்பு உள்ளது. இங்கும் கரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தெலங்கானம் மற்றும் லடாக்கில் தலா 4 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும், ராஜஸ்தானில் 2 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்லாமல், ஆந்திரம், ஹரியாணா, ஒடிஸா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 126 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிரத்தில் 64 வயது முதியவர் பலியான நிலையில், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பிரான்ஸ் சென்று வந்தவர். இருவருமே தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கடந்த வாரம் கரோனா பாதித்து உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 63 வயதாகும் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய இணை அமைச்சர் முரளீதரன், கரோனா அறிகுறிகள் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதே சமயம், கேரளத்திலும் ஸ்பெயினில் இருந்து திரும்பிய மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com