
ஜெய்பிரதாப் சிங்
லக்னெள: கரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கனிகா கபூா் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இதையடுத்து, அவரது நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் தலைவா்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் (66), லக்னெளவில் உள்ள கிங் ஜாா்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். பின்னா் வீட்டிலேயே தன்னை அவா் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
பின்னா் நடத்திய பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று கிங் ஜாா்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சய்தித்தொடா்பாளா் சுதீா் சிங் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் கடந்த வியாழக்கிழமை லக்னெளவில் செய்தியாளா்களை சந்தித்தபோது பங்கஜ் சிங், திரேந்திர சிங் உள்பட 3 எம்எல்ஏக்கள் உள்பட அவருடன் இருந்த 28 பேரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை’ என்றாா்.