இஎம்ஐ செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: மக்களுக்கு எப்படி பலனளிக்கும்?

தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் நிலுவைக்கான தவணைகளை 3 மாதங்களுக்கு வசூலிக்காமல் தள்ளிவைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
rbi075013
rbi075013


மும்பை: தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் நிலுவைக்கான தவணைகளை 3 மாதங்களுக்கு வசூலிக்காமல் தள்ளிவைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா எதிரொலியாக சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தனியார் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் நிலுவைக்கான தவணைத் தொகையை (இஎம்ஐ) வசூலிப்பதில் இருந்து வங்கிகள் 3 மாத கால அவகாசம் வழங்கலாம்.

அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது என்றும் சக்தி காந்ததாஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியை ஏற்று ஒரு வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கினால், வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு கடன் தொகைக்கான தவணையை செலுத்துவதில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

ஆனால் அதே சமயம், இந்த மூன்று மாதத் தவணையை செலுத்த வேண்டும் என்று அர்த்தமாகாது. உதாரணமாக, இன்னும் ஆறு தவணைகளை ஒருவர் செலுத்த வேண்டியிருந்தால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அவர் தவணையைச் செலுத்த வேண்டும். அதுவே அவர் ஏப்ரல் முதல் 3 மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டாரேயானால், அதன்பிறகு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது தவணையைச் செலுத்த வேண்டியது வரும். இதன் மூலம் மார்ச் மாதம் விடுமுறை அல்லது தொழில் பாதித்து வருமானம் குறைவாக இருக்கும்பட்சத்தில் வங்கிக்கடனை செலுத்த வேண்டிய அழுத்தம் பொதுமக்களுக்கு இருக்காது.

அதே சமயம், இந்த மூன்று மாதங்களுக்கு ஒரு வேளை மக்களால் தவணையைச் செலுத்த முடியாமல் போனால், அதனால் வங்கிகளிடம் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருந்தும், வட்டி அல்லது அபராதம் போன்றவற்றில் இருந்தும், சிபில் ஸ்கோரில் சிக்கல் ஏற்படுவதில் இருந்தும் தப்பிக்கலாம்.

மேலும், இது கடன் தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய தொகைக்குப் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com