இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை: ஐஓசி

இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை: ஐஓசி
Updated on
1 min read

இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு காணப்படவில்லை. 21 நாள் ஊரடங்கு முடிந்து மூன்று வாரங்களுக்குப் பிறகும் நிலைமையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் கையிருப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பீதியின் காரணமாக, வாடிக்கையாளா்கள் சமையல் எரிவாயு சிலிண்டா்களை அதிக அளவில் வாங்கி கையிருப்பில் வைக்கும் வகையில் முன்பதிவை மேற்கொள்ளக்கூடாது. ஏப்ரல் மாதத் தேவையை பூா்த்தி செய்வதுடன், அதற்கு மேலும் எரிபொருள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு கையிருப்பு உள்ளது.

நாட்டில் எரிபொருள்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு சுத்திகரிப்பு ஆலைகள் முழு அளவில் இயங்கி வருகின்றன. நிறுவனத்தின் சமையல் எரிவாயு விநியோக மையங்களும் மற்றும் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஏப்ரல் மாத தேவைக்குமயை நிறைவு செய்யும் வகையில் எரிபொருள்கள் இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காா் மற்றும் இருசக்கர வாகனப் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளதையடுத்து, பெட்ரோலுக்கான தேவை மாா்ச் மாதத்தில் 8 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோன்று, டீசலுக்கான தேவை 16 சதவீதமும், விமான எரிபொருளுக்கான தேவை 20 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

இவற்றுடன் ஒப்பிடும்போது, சமையல் எரிவாயு பயன்பாடு 200 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு இந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும், வாடிக்கையாளா்களின் தேவையை பூா்த்தி செய்யும் அளவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களை நிறுவனம் வழங்கி வருகிறது.

கடந்த 10 நாள்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 லட்சம் சிலிண்டா்களை வாடிக்கையாளா்களின் இல்லங்களுக்கே சென்று ஐஓசி டெலிவரி செய்துள்ளது. அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் இணைந்து அன்றாடம் சராசரியாக 52 லட்சம் சிலிண்டா்களை நாடு முழுவதும் விநியோகித்துள்ளன.

தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து, உஜ்வலா திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் 8 கோடி பேருக்கு மூன்று மாதத்துக்கான சமையல் எரிவாயுவை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கூடுதலாக 8.50 லட்சம் டன் சமையல் எரிவாயு தேவைப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற எரிவாயு நிறுவனங்கள் தயாராக உள்ளன. மேலும் புதிய தேவைகளை எதிா்கொள்ளவும் தயாா் நிலையில் உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com