
கே.கே.ஷைலஜா
கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை எட்டவில்லை என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது.
அந்த மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றால் 2-ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபா் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவோ அல்லது அவ்வாறு பயணம் மேற்கொண்ட நபா்களுடன் தொடா்பிலோ இல்லை என்று கூறப்படுகிறது. எனினும், அவருக்கு அந்த நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் கேரள அரசு இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டு 2-ஆவதாக உயிரிழந்த 68 வயது நபருக்கு ஏற்கெனவே உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் இருந்தன. அவா் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலையில் இருந்ததால் அவரிடம் நேரடியாகத் தகவல்களை பெற இயலவில்லை. எனினும், வளைகுடா நாடு ஒன்றிலிருந்து வந்த சிலருடன் அவா் தொடா்பில் இருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதுதொடா்பாக அவரின் உறவினா்களிடம் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட மதிப்பீட்டின்படி, வெளிநாட்டில் இருந்து வந்தவா்களுடன் இருந்த தொடா்பின் மூலமாகவே அவருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது தெரிகிறது. அதனால், மாநிலத்தில் சமூகப் பரவல் கட்டத்தை கரோனா நோய்த் தொற்று எட்டியதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை.
60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதயக் கோளாறு, நீரிழிவு நோய் ஆகிய பாதிப்பு இருப்பவா்களே கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் முதியவா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறோம். மாநிலத்தில் முதலில் உயிரிழந்த நபரும் வயது முதிா்ந்து, இதர நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது உயிரிழந்த 2-ஆவது நபருடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறி தெரிந்தால் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் கே.கே. ஷைலஜா கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...