
சிம்லா: ஹிமாசலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிம்லா புவியியல் மைய இயக்குநா் மன்மோகன் சிங் கூறியதாவது:
சம்பாவிலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தை மையப்பகுதியாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காலை 11.41 மணியளவில் பதிவானது. அது ரிக்டா் அளவுகோலில் 3.6 அலகு என்ற அளவில் பதிவானது. சம்பா மாவட்டத்தில் கடந்த 4 தினங்களில் ஏற்பட்ட 7-ஆவது நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்கம் அதன் அண்டைய பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றாா் அவா்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 4.5 அலகாக பதிவானது. அதற்கு முன்னா், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து அதிகாலை வரையிலும் 5 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...