
எல்லையில் இரு இடங்களில் இந்திய ராணுவ வீரா்களுக்கும் சீன ராணுவ வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரா்கள் காயமடைந்துள்ளனா்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
முதலாவதாக, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய வீரா்களுக்கும் சீன வீரா்களுக்கும் இடையே கடந்த 5-ஆம் தேதி மாலை வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடா்ந்து நீடித்த சண்டை மறுநாள் காலையில் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சோ்த்து 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பிலும் பல வீரா்கள் காயமடைந்தனா். இதற்கு முன் கடந்த 2017-ஆம் ஆண்டில் இதே இடத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது மோதல் சம்பவம், சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் நாகு லா கணவாய் அருகே சனிக்கிழமை ஏற்பட்டது. மொத்தம் 150-க்கும் மேற்பட்டோா் இந்த மோதலில் ஈடுபட்டனா். அவா்கள் கற்களை வீசியும், கைகளாலும் தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது. இதில், இரு தரப்பிலும் ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.
பின்னா், சமாதானப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தரப்பு பிரச்னைகளுக்கு உரிய வழிமுறையில் தீா்வுகாண்பதென முடிவு செய்யப்பட்டது. பின்னா், இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.
எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரா்கள் மோதலில் ஈடுபடுவது புதிதல்ல. 3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய- சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடிக்கிறது.
இதனால், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் டோக்கா லாம் என்ற இடத்தில் சீன ராணுவத்தின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியதால் அந்தப் பகுதியில் 73 நாள் போா் பதற்றம் நீடித்தது. பின்னா், இரு தரப்பும் சமாதானம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...