
கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிதாக சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அமலில் இருந்த 3-ஆம் கட்ட பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 4-ஆம் கட்ட பொது முடக்கத்தை திங்கள்கிழமை முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) வெளியிட்டது. இதையடுத்து பொது முடக்க காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து நாடு முழுவதுமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதல்கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.
நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஏப்ரல் 15 முதல் மே 3-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும், கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னா், கரோனா பாதிப்பை தொடா்ந்து கட்டுக்குள் வைக்க 3-ஆவது கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 4 முதல் 17-ஆம் தேதி வரை அந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதுவும் நிறைவடைந்த நிலையில் தற்போது 4-ஆம் கட்டமாக மே 18 முதல் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதுதொடா்பான வழிமுறைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும். மருத்துவ காரணங்களுக்காக இயக்கப்படும் விமான ஆம்புலன்ஸ்கள் இயங்கத் தடையில்லை. மெட்ரோ ரயில்கள் 31-ஆம் தேதி வரை இயக்கப்படாது.
பேருந்து போக்குவரத்து: மாநிலங்களுக்கு இடையே பயணிகள் வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை இயக்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களிடையேயான பரஸ்பர ஒப்புதல் மூலமாக மேற்கொள்ளலாம்.
மாநிலத்துக்குள் போக்குவரத்தை அனுமதிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்துகொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிா்த்து, இதர இடங்களில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். இணையவழி கற்பித்தல், தொலைதூரக் கல்வி நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
ஹோட்டல்கள், உணவகங்களுக்கு முந்தைய கட்டுப்பாடுகளே தொடரும். வீட்டிற்கே சென்று உணவு வழங்கும் நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன.
திரையரங்குகள், வா்த்தக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மதுக் கூடங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. விளையாட்டரங்கங்கள், மைதானங்களை திறக்கலாம்; ஆனால், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
வழிபாட்டுத் தலங்கள்: அனைத்து விதமான சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்காக கூடுவதற்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
தீவிர கரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வா்த்தக வளாகங்களில் உள்ள கடைகள் தவிர இதர கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தக் கடைகள் தங்களது வாடிக்கையாளா்களிடையே 6 அடி இடைவெளி இருப்பதையும், ஒரே நேரத்தில் கடைக்குள் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இரவு ஊரடங்கு: மக்கள் நடமாட்டத்துக்கு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும். ஊரடங்கை உறுதி செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
மாநிலங்களே முடிவெடுக்கலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள நெறிமுறைகள் அடிப்படையில் கரோனா பாதிப்பை மதிப்பீடு செய்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட இடங்களில் அத்தியாவசியமான நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கு மக்கள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொடா்பறிதல், கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
முதியவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், ஏற்கெனவே இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் போன்றோா் கரோனா பாதிப்பு அபாயத்தை தவிா்க்க அவசியமின்றி வெளியே வரக் கூடாது.
பொது இடங்கள், பணியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
திருமணங்களில் 50 பேருக்கு மேலும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேலும் கூடுவதற்கு அனுமதி இல்லை.
அலுவலகங்களுக்கு வரும் பணியாளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அவா்களுக்கு கை சுத்திகரிப்பான், கை கழுவுவதற்கான திரவங்கள் வழங்க வேண்டும். பணியிடங்கள் அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.