அதிதீவிர புயலானது உம்பன்; மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அதிதீவிர புயலாக மாறியிருக்கும் உம்பன் கரையைக் கடக்கும் போது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர புயலானது உம்பன்; மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம்


புது தில்லி: அதிதீவிர புயலாக மாறியிருக்கும் உம்பன் கரையைக் கடக்கும் போது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த உம்பன் புயல், ஞாயிற்றுக்கிழமை அதிதீவிர புயலாக மாறியது, திங்கள்கிழமை காலை கடும் புயலாகவும், பின்னர் மிகக் கடும் புயலாகவும் (சூப்பர் புயல்) வலுப்பெற்றது. 

மிக கடும் புயலான உம்பன் இன்று காலை 11 மணி நிலவரப்படி சற்று வலுவிழந்து கடும் புயலாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் கொல்கத்தாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே சுமார் 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில், மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது.

மேலும் உம்பன் புயலானது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 20ம் தேதி மாலையோ அல்லது இரவிலோ மேற்கு வங்க மாநிலம் திகா பகுதிக்கும் - வங்கதேசத்தின் ஹடியாவுக்கும் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம்பன் புயலானது அதிதீவிர புயலாக உள்ளது. இதனால், கரையைக் கடக்கும் பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்கும் முன்பு சற்று வலுவிழந்து தீவிரப் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகமானது மணிக்கு 165 - 175 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும், அவ்வப்போதுஇது 195 கி.மீ. வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மே 19 மற்றும் 20ம் தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும்.  அலைகளின் வேகம் பலமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 19), மத்திய வங்கக் கடல் பகுதிக்கும், செவ்வாய் (மே 19) மற்றும் புதன்கிழமைகளில் (மே 20) வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com