கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவரைக் காணவில்லை: மனைவி குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை விளக்கம்

ஹைதராபாத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரைக் காணவில்லை என மனைவி குற்றம்சாட்டியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஹைதராபாத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரைக் காணவில்லை என மனைவி குற்றம்சாட்டியுள்ளார். 

புதன்கிழமை இரவு மாதவி என்ற பெயர் கொண்ட சுட்டுரைப் பக்கத்திலிருந்து பெண் ஒருவர், "தனது 42 வயது கணவர் மதுசூதன், காந்தி மருத்துவமனையில் காணவில்லை.  வனஸ்தளிபுரத்தைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தில் பல்வேறு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து காந்தி மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர். ராஜா ராவ் இதுபற்றி தெரிவிக்கையில், "42 வயதுமிக்க மதுசூதன், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் மே 1 மாலை 6.03 மணிக்கு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அரசு வழிமுறைகளின்படி கரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைப்பார்கள். ஒருவேளை பலியானவர்களின் குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லையென்றால், மாநகராட்சியே உடலைத் தகனம் செய்துவிடும்.

இந்த விஷயத்திலும், அவரது உடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட காவலரின் கையொப்பமும் பெறப்பட்டுள்ளது. விசாரணையில் மாநகராட்சியே அவரது உடலைத் தகனம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு, அவரது குடும்ப உறுப்பினர்களும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினருக்காக அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால், தங்களது உயிரைப் பணயம் வைத்து கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது தவறு" என்றார்.

காவல் துறையினரிடம் உள்ள தகவலிலும் மதுசூதன் மே 1-ஆம் தேதி பலியானதாகவே உள்ளது.

இதற்கிடையே, அந்த பெண்ணின் டிவிட்டர் பக்கம் செயல்பாட்டில் இல்லை என்றும், டிவிட்டர் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com