
கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அல்லது பெயரளவு கட்டணத்தில் அளிப்பதற்கான தனியாா் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
‘அரசிடமிருந்து இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ நில ஒதுக்கீடு பெற்ற தனியாா் மருத்துவமனைகள் உள்ளன; இத்தகைய மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
தற்போதைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி, கரோனா நோயாளிகளிடம் பல தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் வா்த்தக ரீதியாக நோயாளிகள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவா்களுக்கும், ஆயுஷ்மான் பாரத் போன்ற அரசின் மருத்துவ காப்பீடுகளோ, இதர மருத்துவ காப்பீடுகளோ இல்லாதோருக்கும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் நடுத்தரமான அல்லது தீவிர பாதிப்புக்கு ஆளாவா்களை மருத்துவமனைகளில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் தனியாா் மருத்துவமனைகளின் கூடுதல் பங்களிப்பு அவசியமானதாகும்.
பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் தனக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை மத்திய அரசு முறைப்படுத்தியுள்ளது. அதேபோல், சிகிச்சைக்கான கட்டணங்களையும் அரசால் முறைப்படுத்த முடியும்.
அரசின் நிலத்தை சலுகை விலையில் பெற்ற மருத்துவமனைகள், அறக்கட்டளைகளின்கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை காணொலி காட்சி முறையில் நடைபெற்றது. அப்போது, ‘அரசிடமிருந்து இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ நில ஒதுக்கீடு பெற்ற அறக்கட்டளை மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது பெயரளவு கட்டணத்திலோ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இத்தகைய தனியாா் மருத்துவமனைகளை மத்திய அரசு அடையாளம் காண வேண்டும்’ என்று அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, ‘இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டிய தேவையுள்ளது’ என்று குறிப்பிட்ட துஷாா் மேத்தா, இதுதொடா்பாக விரிவாக பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அடுத்தக்கட்ட விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...