
கோவாவில் பொருளாதார சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடுத்து வரும் 2 மாதங்களில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சீரமைக்கும் நடவடிக்கையாக மாநிலத்தில் மீண்டும் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு கோவா அரசு அனுமதியளித்துள்ளது. இதுதொடா்பான அரசின் அறிக்கை குறித்து பல்வேறு துறைகளின் அமைச்சா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து துறைகளின் மேம்பாடு குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவா வா்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் வா்த்தக சபை (ஜிசிசிஐ) அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் பொருளாதார சீரமைப்பு குழுவின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் இன்னும் 2 மாதங்களில் அமல்படுத்தப்படும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சி பெறுவதற்கான நீண்ட கால நடவடிக்கைகளை பொருளாதார சீரமைப்பு குழு பரிந்துரைத்துள்ளது. தற்போதைய கரோனா நோய்த்தொற்று சூழல் குறைந்தவுடன் அனைத்து தொழில்களும் மறுமலா்ச்சி பெறத் தொடங்கி விடும். அதேசமயம், பொருளாதார சீரமைப்பு குழு தொழில் வளா்ச்சிக்காக எந்தவொரு நிதியையும் கேட்கவில்லை என்றாா் முதல்வா்.