டிசம்பரில் 50% இந்தியர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பர்: மருத்துவ நிபுணர்

நாட்டில் ஊரடங்கு காலம் முடிந்த பிறகுதான் கரோனா தீவிரமாகும் என்று தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் வி. ரவி தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் 50% இந்தியர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பர்: மருத்துவ நிபுணர்


நாட்டில் ஊரடங்கு காலம் முடிந்த பிறகுதான் கரோனா தீவிரமாகும் என்று தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் வி. ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை கரோனா தீவிரமாகவில்லை. ஜூன் மாதத்துக்குப் பிறகு கரோனா பாதிப்பு தீவிரமாகும், மேலும் அப்போது அது சமூகத் தொற்றாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

டிசம்பர் மாத இறுதியில் இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும், ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அவர்களில் 90% பேருக்கு அவர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதே தெரிய வந்திருக்காது என்றும் மருத்துவர் ரவி கூறியுள்ளார்.

கரோனா பாதிக்கும் நோயாளிகளில் 5 - 10 சதவீதம் பேருக்குத்தான் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும், அதிலும் 5 சதவீதம் பேருக்குத்தான் வென்டிலேட்டர் தேவைப்படும் என்றும் கூறினார்.

மேலும் மருத்துவ நிபுணர் ரவி கூறுகையில், இன்னும் ஓரிரு நாள்களில் ஊரடங்கு நிறைவு பெற உள்ளது. அதன் பிறகுதான் கரோனாவைக் கட்டுப்படுத்துவதும், மருத்துவ வசதிகளை அதிகரிப்பதும் மாநில அரசுகளின் முக்கியப் பணியாக இருக்கும். குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை சமாளிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும், கர்நாடகம்தான் 60 பரிசோதனை மையங்களை அமைத்திருக்கும் முதல் மாநிலமாக உள்ளது. 30 மாவட்டங்களிலும், தலா இரண்டு பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இவர் கர்நாடக மாநில சுகாதாரத்துறையின் பேரிடர் படையின் மண்டல அதிகாரியாகவும் உள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியாவில் கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கை 3 மற்றும் 4 சதவீதமாகவே உள்ளது. குஜராத்தில்தான் அதிகபட்சமாக 6% ஆக உள்ளது.

கரோனா தடுப்பூசிக்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் எபோலா, மெர்ஸ், சார்ஸ் போன்று அது உயிர்கொல்லி அல்ல எனறும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com