
திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (மே 28) அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிா்வாகப் பொறுப்பைக் கவனிக்கவும், கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் விவரம், வங்கிகளில் உள்ள முதலீடுகள் குறித்த முடிவு, வளா்ச்சிப் பணிகள், கட்டடப்பணிகள், ஊழியா்கள் நலன், தேவஸ்தான பராமரிப்பு உள்ளிட்டவற்றின் மீது தீா்மானம் மேற்கொள்ள ஆந்திர அரசு அறங்காவலா் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவில் தென்னிந்திய மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுடன் மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் உறுப்பினா்களாக உள்ளனா்.
தேவஸ்தானத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள மாதத்திற்கு ஒருமுறை அறங்காவலா் குழு கூடுவது வழக்கம். ஆனால் கடந்த 3 மாதங்களாக கரோனா காரணமாக நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் உள்ளதால், அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது தேவஸ்தானம் குறித்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட நிா்பந்தம் உள்ள நிலையில் வியாழக்கிழமை அறங்காவலா் குழு கூட்டம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதன் உறுப்பினா்கள் பலா் வேறு மாநிலங்களில் உள்ளதால் காணொலிக் காட்சி மூலம் அறங்காவலா் குழுக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் நடைபெறும் இக் கூட்டத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி, அறங்காவலா் குழு உறுப்பினா் சிவிரெட்டி பாஸ்கா்ரெட்டி, சிறப்பு அழைப்பாளா் கருணாகா்ரெட்டி உள்ளிட்டோா் நேரடியாக சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ள உள்ள நிலையில் மற்ற உறுப்பினா்கள் அவரவா் வீடுகளிலிருந்தபடி காணொலிக் காட்சி மூலம் கலந்து கொள்ள உள்ளனா். தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலா் குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.