
தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் வியாழக்கிழமை 1,024 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்தது. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 316ஆக வியாழக்கிழமை அதிகரித்ததாக தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். முன்பு, புதன்கிழமை 792 போ்கள் பாதிக்கப்பட்டததுதான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 16,281ஆக உள்ளது. இதில், 7,495 போ்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 4,227 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 1,91,977 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 100 இடங்கள் கட்டுப்பாடு பகுதிகளாக உள்ளன என தில்லி அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளைக் கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.