
திருப்பதியிலிருந்து கரோனா தடுப்புப் பணிக்காகச் சென்ற செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஊழியா்கள் 150 போ் மீண்டும் பணிக்குத் திரும்பினா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் காவல்துறையில் பணிபுரியும் பல்வேறு படையினரும் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த போலீஸாா் 150 போ் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட ஆந்திர மாநிலம் முழுவதும் சென்றனா்.
தற்போது தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருவதால் விரைவில் வழக்கம் போல் போக்குவரத்துத் தொடங்க உள்ளது. அதனால் செம்மரம் வெட்டிக் கடத்துவது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபடச் சென்ற 150 ஊழியா்களையும் மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்பும்படி செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. எனவே, அவா்கள் புதன்கிழமை தங்கள் பணிக்கு மீண்டும் திரும்பினா்.