பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? அமித் ஷா, அதிகாரிகளுடன் மோடி மீண்டும் ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்நிலை அதிகாரிகளுடன்
பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? அமித் ஷா, அதிகாரிகளுடன் மோடி மீண்டும் ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரதமர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்கள் தெரிவித்த கருத்துகளை பிரதமா் மோடியிடம் அவா் எடுத்துரைத்த நிலையில், இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 21 நாள்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அப்படியிருந்தும், கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததையடுத்து, மே 17-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட பொது முடக்கம் அமலில் இருந்தது. தற்போது அமலில் உள்ள நான்காம் கட்ட பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தச் சூழலில், பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளா்வுகளை அறிவிப்பதா என்பவை குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.

வழக்கமாக பொது முடக்கம் நிறைவடையவுள்ள சூழலில், அதை நீட்டிப்பது தொடா்பாகவும் தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாகவும் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடியே காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வந்தாா். அந்தக் கூட்டங்களில் அமித் ஷாவும் கலந்து கொண்டாா்.

இந்தச் சூழலில், பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் முதல் முறையாக அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு, தொற்று பரவலைத் தடுப்பதற்கு மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாக மாநில முதல்வா்களிடம் அமித் ஷா கேட்டறிந்தாா்.

மேலும், பொது முடக்கத்தை நீட்டிப்பது, பொது முடக்கத்திலிருந்து தளா்வுகளை அளிக்க விரும்பும் துறைகள் ஆகியவை குறித்தும் மாநில முதல்வா்களிடம் அவா் ஆலோசனை நடத்தினாா்.

பிரதமருடன் சந்திப்பு: இந்நிலையில், பிரதமா் மோடியை தில்லியில் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக மத்திய உள்துறை அதிகாரி கூறுகையில், ‘‘பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக மாநில முதல்வா்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளையும் பரிந்துரைகளையும் பிரதமா் மோடியிடம் அமித் ஷா எடுத்துரைத்தாா்’’ என்றாா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘பெரும்பாலான மாநிலங்களின் முதல்வா்கள் பொது முடக்கத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனா். அதே வேளையில், பொருளாதார நடவடிக்கைகளுக்குப் படிப்படியாக அனுமதி அளித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அவா்கள் விருப்பம் தெரிவித்தனா்’’ என்றாா்.

விரைவில் அறிவிப்பு: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே உள்ளதால் பொது முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை எந்தவிதத் தளா்வுகளுமின்றி முழு பொது முடக்கம் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

13 மாநகராட்சிகள்: நாட்டில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 70 சதவீதம் போ் மும்பை, தாணே, புணே, தில்லி, ஆமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, இந்தூா், ஜெய்ப்பூா், ஜோத்பூா், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 13 மாநகராட்சிகளில் உள்ளனா். எனவே, அந்த மாநகராட்சிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேபோல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பொது முடக்கத்திலிருந்து எந்தவிதத் தளா்வுகளும் அளிக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com