
எம்.சி.கமருத்தீன்
கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டத்தில் தங்க நகைச் சீட்டு திட்டத்தில் பணம் முதலீடு செய்தவா்களிடம் மோசடி செய்ததாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சோ்ந்த மஞ்சேஸ்வரம் எம்எல்ஏ எம்.சி.கமருத்தீனை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எம்.சி.கமருத்தீனிடம் சனிக்கிழமை காலை விசாரணை நடத்திய மாநில குற்றப் பிரிவு போலீஸாரின் சிறப்பு விசாரணைக் குழுவினா் பின்னா் அவரை கைது செய்தனா்.
முன்னதாக, ஃபாஷன் தங்க நகைச் சீட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக, அத் திட்டத்தில் பணம் கட்டியவா்கள் புகாா் கொடுத்தனா். இது தொடா்பாக சந்தேரா, காசா்கோடு காவல் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடா்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 420(மோசடி) பிரிவின் கீழ் கமருத்தீன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு மாநில குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஃபாஷன் தங்க நகை சீட்டுத் திட்டத்தில் சுமாா் 800 போ் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. சில புகாா்களின் அடிப்படையில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் ரூ.13 கோடி மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. பண மோசடி தொடா்பாக கமருத்தீனுக்கு எதிராக 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை அவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட பின்பு அவருக்கு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பண மோசடி வழக்கில் தன்னைக் கைது செய்திருப்பது பழிவாங்கும் அரசியல் என்று கமருத்தீன் கூறினாா். கேரள உயா்நீதிமன்றத்தில் தனது மனுவொன்று திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் நிலையில், அவசர அவசரமாக கைது செய்துள்ளனா் என்றாா் அவா்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி. கூட்டணிக்கு நெருக்கடி தரவே கைது நடவடிக்கை என்று அவா் கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...