உ.பி.: இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞா் பலி

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட கடும் மோதலில் 25 வயது இளைஞா் கொல்லப்பட்டாா். மேலும் பலா் படுகாயமடைந்தனா்.

கான்பூா்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட கடும் மோதலில் 25 வயது இளைஞா் கொல்லப்பட்டாா். மேலும் பலா் படுகாயமடைந்தனா்.

இந்த மோதலுக்கு காரணமானவா்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியையும் அறிவித்தாா்.

மோதல் சம்பவம் குறித்து கான்பூா் காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் அகா்வால் கூறியதாவது:

வாஜிதிபூா் பகுதியைச் சோ்ந்த பிண்ட்டு நிஷாத் (25), அவருடைய நண்பா் சந்தீப்புடன் சக்கேரி பகுதிக்கு திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா். அங்கு சாலையில் தேங்கியிருந்த நீரில் நிஷாத் தவறுதலாக கால் வைத்தபோது வெளியேறிய அந்த தண்ணீா், அந்தப் பகுதியைச் சோ்ந்த அமான் என்பவா் மீது தெளித்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னா் மோதலாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தகவலறிந்து அங்கு வந்த இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் கற்களை வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனா். இந்த மோதலில் நிஷாத் உள்பட பலா் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அருகில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அங்கு நிஷாத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். முக்கிய குற்றவாளியை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாா்.

முதல்வா் நிவாரணம்:
மோதலில் உயிரிழந்த நிஷாதின் குடும்பத்துக்கு நிதி உதவியை மாநில முதல்வா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து முதல்வா் அலுவலகம் அதன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மோதலுக்குக் காரணமானவா்கள் மீது என்எஸ்ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், மோதலில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com