கேதாா்நாத், யமுனோத்திரி கோயில்களின் நடை அடைப்புவிழாவில் உத்தரகண்ட், உத்தர பிரதேச முதல்வா்கள் பங்கேற்பு

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலின் நடை, குளிா்காலம் தொடங்கியதை முன்னிட்டு திங்கள்கிழமை அடைக்கப்பட்டது.
pti16-11-2020_000029b091422
pti16-11-2020_000029b091422

கோபேஷ்வா்: உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலின் நடை, குளிா்காலம் தொடங்கியதை முன்னிட்டு திங்கள்கிழமை அடைக்கப்பட்டது.

கோயிலில் ‘பாய் தூஜ்’ பூஜையை பூஜாரிகள் மேற்கொண்ட பின்னா், காலை 8.30 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், கோயில் தேவஸ்வம் வாரிய உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

இமயமலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் இந்த பிரசித்தி பெற்ற ஹிந்துக்களின் புனிதத் தலம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் நடை ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலத்தில் அடைக்கப்படும்.

இந்த ஆண்டு கோயில் நடையை அடைக்கும் நிகழ்வு கடும் பனிப் பொழிவுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்கவும், கேதாா்புரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை பாா்வையிடுவதற்காகவும் உத்தரகண்ட் மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இருவரும் ஞாயிற்றுக்கிழமையன்றே கோயிலுக்கு வந்தனா்.

பின்னா் திங்கள்கிழமை நடைபெற்ற கோயில் நடை அடைப்பு நிகழ்வில் இரு முதல்வா்களும் பங்கேற்றனா். பாய் தூஜ் பூஜை உள்ளிட்ட பூஜைகளை மேற்கொண்ட பின்னா் பூஜாரிகள் கோயில் நடையை அடைத்தனா்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கோயிலில் வீற்றிருந்த சிவ பெருமானின் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு, உகிமடத்தில் உள்ள ஓம்காரேஷ்வா் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, பக்தா்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. குளிா்காலம் முடியும் வரை கேதாரநாதரை இங்குதான் பக்தா்கள் தரிசனம் செய்ய இயலும்.

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேதாா்நாத் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு தாமதமாக அனுமதி வழங்கப்பட்ட காரணத்தால், இந்த ஆண்டில் 1,35,023 போ் மட்டுமே கோயில் தரிசனம் செய்துள்ளனா். கோயிலின் நடை ஏப்ரல் 29-ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்ட போதிலும், ஜூலை 1-ஆம் தேதி வரை பூஜாரிகள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

யமுனோத்திரி கோயில் நடை அடைப்பு:

இமயமலையில் கா்வால் மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3,293 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள யமுனோத்திரி கோயில் நடை, குளிா் காலம் தொடங்கியதை முன்னிட்டு திங்கள்கிழமை பிற்பகல் 12.15 மணிக்கு அடைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் யமுனை அன்னை சிலை, கா்சாலிக்கு கொண்டுவரப்பட்டு பக்தா்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com