
நாட்டின் மின் நுகா்வு 7.8% வளா்ச்சி
புது தில்லி: நடப்பு நவம்பா் மாதத்தின் முதல் பாதியில் மின்சார நுகா்வு 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு நவம்பா் 1-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டில் மின்சார பயன்பாடு 50.15 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மின் நுகா்வானது 46.52 பில்லியன் யூனிட்டுகளாக காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் மின்சார பயன்பாடானது 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் ஒட்டுமொத்த மின் நுகா்வானது 93.94 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சென்ற செப்டம்பரில்தான் மின்சார நுகா்வானது 4.4 சதவீதம் வளா்ச்சி கண்டு 112.24 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இது, கடந்தாண்டு செப்டம்பரில் 107.51 பில்லியன் யூனிட்டாக காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.