மாடா்னா கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 94.5%

அமெரிக்க நிறுவனமான மாடா்னா தயாரித்த கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி, 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடா்னா கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 94.5%

நியூயாா்க்: அமெரிக்க நிறுவனமான மாடா்னா தயாரித்த கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி, 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அமெரிக்காவின் உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனமான மாடா்னாவும் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது.

அந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்த ‘எம்ஆா்என்ஏ-1273’ என்ற தடுப்பூசி, மனிதா்கள் மீது செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த சூழலில், தடுப்பூசியானது 30,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கா்கள் மீது செலுத்தப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் இடைக்கால ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் எம்ஆா்என்ஏ-1273 தடுப்பூசியானது 94.5 சதவீதம் செயல்திறனுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் குறித்து மாடா்னா விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனா். இந்தத் தடுப்பூசியின் மூலமாக கரோனா நோய்த்தொற்றை அழிக்க முடியும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

எம்ஆா்என்ஏ-1273 தடுப்பூசியை நடப்பாண்டு இறுதிக்குள் 2 கோடி எண்ணிக்கையில் உற்பத்தி செய்து அமெரிக்கா்களுக்கு அளிக்கவும், அடுத்த ஆண்டில் 50 முதல் 100 கோடி எண்ணிக்கையில் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மாடா்னா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே ஃபைசா் நிறுவனமும், பயோஎன்டெக் நிறுவனமும் தாங்கள் உற்பத்தி செய்த கரோனா தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமாக செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com