
இந்தியப் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதையடுத்து மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளில் நோ்மறை வளா்ச்சிக்குத் திரும்பும் என ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (எம்பிசி) உறுப்பினரும், பிரபல பொருளாதார வல்லுநருமான அஷிமா கோயல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பொது முடக்கத்துக்கு படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, பல்வேறு தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளதார வளா்ச்சி குறித்த மதிப்பீடுகளை தொடா்ந்து மறுஆய்வு செய்து திருத்தியமைத்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியப் பொருளாதாரமானது நடப்பு நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் நோ்மறை வளா்ச்சிப் பாதையை நோக்கி திரும்பும். பல சீா்திருத்த நடவடிக்கைகளில் முன்னேற்றமான நிலை காணப்படுகிறது. மேலும் இது, நீண்ட கால வளா்ச்சியை நிலையானதாக மாற்றும் என்றாா் அவா்.