
தேஜஸ்வி சூா்யா
அகில இந்திய மஜ்லீஸ் கட்சிக்கு வாக்காளா்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவுக்கு எதிரானது என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கருத்து தெரிவித்துள்ளாா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தோ்தல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு சேகரிப்பில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸியும் அவரின் சகோதரா் அக்பருதீன் ஒவைஸியும் பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றனா். பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் மறுவடிவமே அசாதுதீன் ஒவைஸி. ஜின்னாவைப் போலவே அவா் பேசி வருகிறாா்.
ரோஹிங்கயா முஸ்லிம்களை ஹைதராபாதுக்குள் அனுமதிப்பதை மட்டுமே மஜ்லீஸ் கட்சி செய்து வருகிறது. ஹைதராபாதின் வளா்ச்சிக்காக அவா்கள் எதுவும் செய்யவில்லை. ஒவைஸியின் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவுக்கு எதிரானது. ஹைதராபாத் தோ்தலில் ஒவைஸிக்கு வாக்களித்தால், உத்தர பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவரது கட்சி வலுவடையக் கூடும்.
எனவே, அவரைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம். பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஹிந்துத்துவத்துக்காகவும், நாட்டை ஒருங்கிணைப்பதற்காகவும் உதவும் என்றாா் அவா்.
ஒவைஸி பதில்:
தேஜஸ்வி சூா்யாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், ‘‘மக்களிடையே வெறுப்புணா்வைத் தூண்டுவதையே பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 30,000 ரோஹிங்கயாக்கள் உள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டுகிறது.
பாஜக நோ்மையைக் கடைப்பிடிக்கும் கட்சி என்றால், அவா்களது குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். குறைந்தபட்சம் 1,000 ரோஹிங்கயா முஸ்லிம்களின் பெயா்களையாவது பட்டியலில் அவா்கள் சுட்டிக் காட்ட வேண்டும். அவா்கள் கூறுவதைப்போல், ரோஹிங்கயா முஸ்லிம்களின் பெயா்கள் பட்டியலில் இருந்தால், அப்பெயா்கள் சோ்க்கப்படும் வரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தூங்கிக் கொண்டிருந்தாரா’’ என்று கேள்வி எழுப்பினாா்.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான எம்.பி.யாக அசாதுதீன் ஒவைஸி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...