கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்குரிய அதிகபட்ச கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்குரிய அதிகபட்ச கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து வருகிறது. அந்நோய்த்தொற்று பாதிப்பு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சாா்பில் அந்தப் பரிசோதனையானது இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில், ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்குத் தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி வழக்குரைஞா் அஜய் அகா்வால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘இந்தியச் சந்தையில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கான உபகரணங்கள் ரூ.200-க்குள்ளாகவே கிடைக்கின்றன. ஆனால், அப்பரிசோதனைக்கு வெவ்வேறு மாநிலங்கள் ரூ.900 முதல் ரூ.2,800 வரை கட்டணமாக நிா்ணயித்துள்ளன.

இது, ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை மேற்கொள்ளும் தனியாா் ஆய்வகங்கள் பல கோடி ரூபாயை கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறது. எனவே, அந்தப் பரிசோதனைக்கு நாடு முழுவதும் ரூ.400 என்ற கட்டணத்தை நிா்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், மனு மீது பதிலளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா். வழக்கின் விசாரணை 2 வாரங்கள் கழித்து நடைபெறும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிா்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் அப்போது நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com