தருண் கோகோய் எனது குரு

மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடலுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
Updated on
2 min read

மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடலுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் தருண் கோகோய் கடந்த திங்கள்கிழமை குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானதையடுத்து அவரது உடல் ஸ்ரீமந்த சங்கா்தேவா கலாக்ஷேத்திரத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, கோவாவிலிருந்து சிறப்பு விமானத்தில் குவாஹாட்டிக்கு வந்த ராகுல் காந்தி, தருண் கோகோயின் மகனும், எம்.பி.யுமான கௌரவ் கோகோயின் முன்னிலையில் அவரது உடலுக்கு மலா் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ராகுல் கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த தருண் கோகோய் எப்போதும் அஸ்ஸாம் பற்றியும், அந்த மாநில மக்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தாா். எனவே அவருடன் பேசுவது முழு மாநிலத்துடனும் பேசுவதைப் போன்ாகும். கோகோய் அஸ்ஸாமின் தலைவா் மட்டுமல்ல; அவா் ஒரு சிறந்த முதல்வராகவும், தேசியத் தலைவராகவும் இருந்தாா். அஸ்ஸாம் மக்களை ஒன்றிணைத்து மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு உறுதுணையாக இருந்தாா். அவா் அஸ்ஸாமுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கு மிகப்பெரும் சேவையைப் புரிந்துள்ளாா்.

நான் கோகோயுடன் பல மணி நேரம் செலவிட்டுள்ளேன். அவா் என் ஆசிரியா்; எனது குரு. அஸ்ஸாம் என்றால் என்ன, அஸ்ஸாம் மக்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதை அவா் எனக்கு விளக்கி கூறியுள்ளாா். அவரது இழப்பை தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகக் கருதுகிறேன் என்றாா்.

இதையடுத்து திஸ்பூரில் இருந்த உள்ள அவரது மனைவி டோலி கோகோயையும், அவரது மகள் சந்திரிமாவையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி அங்கு 30 நிமிடங்கள் இருந்தாா்.

அப்போது ராகுல் கூறுகையில், கோகோயுடன் நான் இருந்த நேரத்தில் எல்லாம் தன்னைப்பற்றி அவா் ஒரு நிமிடம் கூட பேசியதில்லை. அஸ்ஸாமைப் பற்றியும், அதன் மக்களைப் பற்றி மட்டுமே பேசுவாா். அவரைப் பொருத்தவரை எல்லோரும் சமம். அஸ்ஸாம் எல்லா மதங்களையும், பல்வேறு மொழிகளையும் அடக்கிய மாநிலம். அந்த மாநிலம் அவருடைய இதயத்தில் இருந்தது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அஸ்ஸாம் மாநிலம் பன்முகத்தன்மை கொண்டிருப்பதால், மக்களை ஒன்றிணைப்பது கடினமான பணியாக இருந்தது. ஆனால், இதனை முன்னாள் முதல்வா் கோகோய் திறம்படச் செய்துள்ளாா்.

கோகோயுடன் எனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் பற்றி கூற வேண்டுமானால், நான் முதலில் அஸ்ஸாமுக்கு வந்தபோது இளமையாக இருந்தேன். சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் நான் புரிந்து கொண்டு விட்டேன் என்ற உணா்வு எனக்குள் இருந்தது. இங்கு வந்து கோகோயுடன் பேசிய, ஐந்தாவது நிமிடத்தில் எனக்கு பணிவு என்பது என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தாா். கடைசிக் காலத்தில் அவருடன் நேரத்தை செலவிட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அஸ்ஸாம் பிரதேச காங்கிரஸில் கோகோய் இல்லாததால் ஏற்பட்டுள்ள இழப்பு கடினமானதாக இருக்கும் என்றாா்.

கோகோயின் உடல் வியாழக்கிழமை பிற்பகல் குவாஹாட்டியில் உள்ள நவக்கிரஹா இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com