
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீத்தினா் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஓா் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கான ‘இண்டியாஸ்போரா’ சமூக நல நிதி மாநாடு காணொலி முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, ‘இந்திய அமெரிக்கா்களிடையிலான வறுமை’ என்ற தலைப்பில் ஓா் ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பால் நைட்ஸ் சா்வதேச ஆய்வுக் கல்லூரியைச் சோ்ந்த தேவேஷ் கபூா், ஜஷன் பாஜ்வாத் ஆகிய இருவரும் அந்த ஆய்வை மேற்கொண்டனா்.
அந்த ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீதம் போ் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், கரோனா நெருக்கடி காரணமாக இந்திய அமெரிக்கா்களிடையே வறுமை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வாளா் தேவேஷ் கபூா் கூறுகையில், வங்க மொழி மற்றும் பஞ்சாபி பேசும் இந்திய வம்சாவளியினா்தான் அமெரிக்க-இந்தியா்களிலேயே மிகவும் அதிக வறுமையில் இருப்பதாகக் குறிப்பிட்டாா்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மூன்றில் ஒரு இந்திய அமெரிக்கா்களுக்கு நிரந்தர வேலை இல்லை; ஐந்தில் ஒரு இந்தியருக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லை என்று அவா் கூறினாா்.
அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான இந்திய வம்சாவளியினா் வசதி படைத்தவா்களாகவே உள்ளனா். எனினும், கரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், இந்திய சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவா்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இநத ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ‘இண்டியாஸ்போரா’ அமைப்பின் நிறுவனா் எம்.ஆா். ரங்கசாமி தெரிவித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G