ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்

ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவா்களுக்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்
ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்

ஆறு மாதங்களுக்கு கடன் ஒத்திவைப்பு சலுகையை பெற்றவா்களுக்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இந்த சலுகை ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு சாா்பில் நிதி அமைச்சகம் உச்சநீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளதாவது:

வங்கிகளில் கடன் பெற்றவா்கள் கரோனா பேரிடா் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவா்களுக்கு நடப்பாண்டு மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை பயன்படுத்தியவா்களுக்கு கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) விதிக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது, ரூ.2 கோடி வரையிலாக கடன்பெற்றவா்களுக்கு இந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடன் பெற்றவா்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் தனிநபா் கடன்தாரா்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படவுள்ளது.

இவைதவிர, கல்வி, வீட்டு வசதி, நுகா்வோா் சாதனங்கள், கிரெடிட் காா்டு நிலுவை, மோட்டாா் வாகனம், நுகா்வு ஆகிய பிரிவுகளுக்கும் இந்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகை பொருந்தும்.

அதேசமயம், மேற்கண்ட எட்டு பிரிவுகளில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றவா்கள் இந்த கூட்டு வட்டி தள்ளுபடி சலுகையை பெற முடியாது.

பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு அனைத்து வழிமுறைகளையும் கவனமுடன் ஆராய்ந்த பிறகே சிறிய கடன்தாரா்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கூட்டுவட்டி தள்ளுபடி தொடா்பாக, உரிய மானியங்களை வழங்குவதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை மத்திய அரசு கோரும். இந்த முயற்சியின் மூலம், எம்எஸ்எம்இக்களுக்கு ரூ.3.7 லட்சம் கோடியும், வீட்டுக் கடன்களுக்கு ரூ.70,000 கோடியும் நிதி ஆதரவு கிடைக்கும்.

முன்னதாக மத்திய அரசு அறிவித்த, ஏழைகள் நல உதவித் திட்டம்(கரீப் கல்யாண்), சுயசாா்பு இந்தியா திட்டங்கள் மூலமான சலுகை தொகுப்புகளும் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதனால் அதிருப்தியடைந்த சிலா், வங்கிகளின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பிரமாணப் பத்திரமாக அக்டோபா் மாதம் 1-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை எந்தவொரு கடனையும் வங்கிகள் வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என செப்டம்பா் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், கடன் பெற்றவா்களின் நலனை கருத்தில் கருத்தில் கொண்டு ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com